நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல - விராட் குறித்த மிஸ்ராவின் விமர்சனத்துக்கு நவீன் உல் ஹக் பதிலடி
|இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் விராட் கோலியை விமர்சித்திருந்தார்.
மும்பை,
கடந்த 2023-ல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் லக்னோ - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது விராட் கோலி, லக்னோ அணியின் நவீன் உல் ஹக் மற்றும் கவுதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுதம் கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் செல்லும் இடங்களில் எல்லாம் கோலி.. கோலி... என்று கோஷமிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் செயல்பாடுகள் எல்லை மீறியது.
இதன்பின் உலகக்கோப்பை தொடரின்போது நவீன் உல் ஹக்கை நேரடியாக அழைத்து விராட் கோலி கட்டி பிடித்து நட்பு பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் நவீன் உல் ஹக்கிற்கு ஆதரவாக ரசிகர்கள் கோஷம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் பின் நவீன் உல் ஹக் - விராட் கோலி இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது.
இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா சமீபத்திய பேட்டியில் விராட் கோலியை விமர்சித்திருந்தார். நவீன்-உல்-ஹக்கை ஜூனியர் என்று பார்க்காமல் விராட் கோலி திட்டியதாக அமித் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அன்றைய நாளில் போட்டி நடைபெற்ற பரபரப்பான சூழ்நிலையில் விராட் கோலியும் தாமும் மோதிக்கொண்டதாக நவீன்-உல்-ஹக் கூறியுள்ளார். அத்துடன் களத்தில் சண்டை போட்டாலும் நாங்கள் எதிரிகள் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த உலகக் கோப்பையில் தாமும் விராட் கோலியும் பகையை மறந்து அந்த பிரச்சனையை பேசி தீர்த்து விட்டு நண்பர்களாக மாறியதாகவும் நவீன் கூறியுள்ளார்.
அந்த வகையில் அமித் மிஸ்ராவின் கருத்துக்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் இது பற்றி நவீன் பேசியது பின்வருமாறு:- "அது போட்டியின் பரபரப்பில் நடந்த விஷயமாகும். விராட் கோலி அவருடைய அணிக்கு விளையாடினார். நான் என்னுடைய அணிக்காக விளையாடினேன். அந்த வகையில் என்னுடைய அணிக்காக அல்லது நாட்டுக்காக விளையாடினால் நான் என்னுடைய அனைத்தையும் கொடுப்பேன் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் போட்டியின் முடிவில் நாங்கள் அனைவருமே நண்பர்கள். நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல. சண்டைகளை களத்திலேயே விட்டு செல்வோம். எதையும் எடுத்துச் செல்ல மாட்டோம். அதுபோல கடந்த உலகக்கோப்பையில் நாங்கள் அதை முடித்து விட்டோம்" என்று கூறினார்.