முதல் ஆட்டத்தில் சந்தித்த இந்தியாவை மீண்டும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்- மிட்செல் ஸ்டார்க்
|உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா,
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் 10 தொடர் வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் 2 தோல்விகளை சந்தித்தாலும் பின்னர் எழுச்சிப்பெற்று வரிசையாக 8 வெற்றிகளை பதிவுசெய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் தங்களது முதல் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்தன. சென்னையில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் முதல் ஆட்டத்தில் சந்தித்த இந்தியாவை மீண்டும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் தாமும் ஹேசல்வுட்டும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இம்முறை பைனலில் இந்தியா தடுமாற்றத் துவக்கத்தை பெறும் அளவுக்கு அசத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "நாங்கள் எப்போதுமே சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம். இத்தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடும் இந்தியாவும் நாங்களும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளோம். குறிப்பாக தொடரின் முதல் ஆட்டத்தில் அவர்களை எதிர்கொண்ட நாங்கள் கடைசியாகவும் எதிர்கொள்வது இந்த உலகக்கோப்பைக்கு நல்ல முடிவாக இருக்கும். பவர்பிளே ஓவர்களை எங்களுக்கு சாதகமான வழியில் கொண்டு வர வேண்டும். குறிப்பாக ஜோஸ் மற்றும் நான் இந்த உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. எனவே இறுதிப்போட்டியில் பவர் பிளேவில் நன்றாக செயல்படுவது சிறப்பாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.