< Back
கிரிக்கெட்
பேஸ்பால் அணுகுமுறையில் மாற்றங்களை செய்ய உள்ளோம் - இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம்

image courtesy: PTI 

கிரிக்கெட்

பேஸ்பால் அணுகுமுறையில் மாற்றங்களை செய்ய உள்ளோம் - இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம்

தினத்தந்தி
|
11 March 2024 9:32 AM IST

பேஸ்பால் அணுகு முறையில் மாற்றங்களை செய்ய உள்ளதாக இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ் தரவரிசையிலும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி உள்ள இந்தியா, 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் பேஸ்பால் அணுகுமுறையை மூட்டை கட்டி வைத்துவிட்டு சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் விளையாடி முன்னேறும் வழியை பாருங்கள் என்று முன்னாள் கேப்டன் நாசர் உசேன் இங்கிலாந்து அணியை விமர்சித்தார்.

இந்நிலையில் இந்த தொடரில் தங்களை விட சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட இந்தியாவுக்கு பாராட்டு கொடுப்பதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் கூறியுள்ளார். மேலும் அதிரடியாக மட்டுமே விளையாடி வெல்ல முடியாது என்பதை இந்திய தொடரில் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கும் மெக்கல்லம் இன்னும் சில மாதங்களில் பேஸ்பால் அணுகுமுறையில் தேவையான மாற்றத்தை செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"இந்தியா விளையாடிய விதத்திற்கு பாராட்டுகள். அவர்கள் எப்போதும் அதிகப்படியான அழுத்தத்தில் இருந்தனர். ஏனெனில் அவர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் அந்த முக்கியமான தருணங்களை சரியாக கையாண்ட இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் எந்தளவுக்கு சிறந்த அணி என்பதை காண்பித்தனர். சொல்லப்போனால் நாங்கள் விளையாட நினைத்த ஸ்டைலை அவர்கள் மிஞ்சி விட்டனர்.

அது நாங்கள் விளையாடும் விதத்தில் கொஞ்சம் பின்வாங்க வைத்துள்ளது. அதனால் நாங்கள் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இந்த தொடரில் நாங்கள் நிறைய கற்றுள்ளோம். இந்தியா எங்களை மிஞ்சி விளையாடியது. குறிப்பாக முக்கியமான தருணங்களில் உண்மையாகவே அவர்கள் எங்களை விட நன்றாக விளையாடி விட்டனர்.

அடுத்த கோடை காலத்திற்குள் நாங்கள் பின்பற்றும் அணுகுமுறையில் மாற்றம் செய்த வெர்ஷனை உருவாக்குவோம். அதே சமயம் தற்போதைய அணுகுமுறையை வைத்து நாங்கள் கடந்த 2 வருடங்களாக நன்றாகவே விளையாடினோம். இங்கிலாந்தின் கிரிக்கெட்டில் உள்ள திறமைகளை அதை வைத்து நாங்கள் வெளிக்கொண்டு வந்தோம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்