ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: முதல்நாள் 'டிக்ளேர்' செய்ததில் வருத்தமில்லை - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
|ஆஷஸ் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், முதல் நாளில் ‘டிக்ளேர்’ செய்ததில் வருத்தமில்லை என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
பர்மிங்காம்,
பர்மிங்காமில் நடந்த பரபரப்பான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை ருசித்தது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 281 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் 3 மணி நேரம் தாமதமாக தொடங்கிய கடைசி நாளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது மதில் மீது பூனையாக தெரிந்தது. உஸ்மான் கவாஜா (65 ரன்) அலெக்ஸ் கேரி (20 ரன்) வீழ்ந்ததும் இங்கிலாந்தின் கை சற்று ஓங்கியது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 227 ரன்களுடன் பரிதவித்தது.
இந்த சூழலில் 9-வது விக்கெட்டுக்கு கேப்டன் பேட் கம்மின்சும், நாதன் லயனும் கைகோர்த்து போராடினர். லயனுக்கு 2 ரன்னில் இருந்த போது கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தவற விட்டது அவர்களுக்கு பாதகமாக மாறியது. பதற்றமும், திரில்லிங்கும் நிறைந்த கடைசி ஒரு மணி நேரத்தில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு தாக்குதல் மற்றும் பீல்டிங் அரணை கச்சிதமாக தகர்த்த ஆஸ்திரேலியா 92.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 282 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கம்மின்ஸ் 44 ரன்களுடனும் (73 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), நாதன் லயன் 16 ரன்னுடனும் (28 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர்.
18 ஆண்டுக்கு முன்பு இதே மைதானத்தில் 282 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடிய போது 2 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. இப்போது அதே மாதிரியான இலக்கை எட்டிப்பிடித்து ஆஸ்திரேலியா பழிதீர்த்து இருக்கிறது. அத்துடன் ஆஷஸ் கிரிக்கெட்டில் கடந்த 75 ஆண்டுகளில் விரட்டிப்பிடிக்கப்பட்ட (சேசிங்) அதிகபட்ச இலக்காகவும் இது அமைந்தது.
தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'நாங்கள் எப்போதும் வெற்றி பெறவே விரும்புகிறோம். இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. ஆனாலும் கடைசி வரை போராடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறோம். விறுவிறுப்பான இந்த டெஸ்ட் போட்டியை பார்த்த அனைவரும் சீட்டின் நுனிக்கே வந்திருப்பார்கள். இனி வரும் போட்டிகளை இன்னும் அதிகமானோர் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
முதல் இன்னிங்சில் தொடக்க நாளிலேயே 'டிக்ளேர்' செய்தது (8 விக்கெட்டுக்கு 393 ரன்னில் டிக்ளேர்) வருத்தம் அளிக்கிறதா? என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக இல்லை. கடைசி 20 நிமிடங்கள் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினேன். டிக்ளேர் செய்யாமல் இருந்திருந்தால் மேலும் 40 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம் அல்லது 2 பந்துகளில் எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்திருக்கலாம். எந்த மாதிரி நடந்திருக்கும் என்ற கற்பனைக்குள் செல்ல விரும்பவில்லை. என்ன சொன்னாலும் தோல்வி அடைந்து விட்டோம். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக எங்களது அணுகுமுறையை (ஆக்ரோஷ பாணி) மாற்றப்போவதில்லை. அடுத்த போட்டியில் இன்னும் தீவிரமாக ஆடுவோம்' என்றார்.
இந்த டெஸ்டில் இரு அணியினிரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 2 ஓவர் தாமதமாக வீசியது தெரியவந்தது. இதையடுத்து இரு அணி வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் இருந்து இரு புள்ளி தகுதி இழப்பும் செய்யப்பட்டது. இந்த வெற்றிக்காக ஆஸ்திரேலியாவுக்கு 12 புள்ளி கிடைத்தது. அது 10 ஆக குறைந்துள்ளது. இங்கிலாந்து இன்னும் புள்ளி கணக்கை தொடங்காததால் புள்ளிகள் எடுக்கும் போது அந்த 2 புள்ளி கழிக்கப்படும்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 28-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.