"எங்களுக்கும், மழைக்கும் ராசியில்லை" - தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் பவுச்சர் புலம்பல்
|உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவுக்கும், மழைக்கும் ராசியே கிடையாது என்று பயிற்சியாளர் பவுச்சர் கூறியுள்ளார்.
ஹோபர்ட்,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் ஹோபர்ட்டில் நடந்த தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த ஆட்டம் மழையால் 2½ மணி நேரம் தாமதம் ஆனதால், 9 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 9 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
மழை மற்றும் போதிய நேரம் இல்லாததால் அத்துடன் இந்த ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும் 2 ஓவர் ஆட்டம் நடந்திருந்தால் தென்ஆப்பிரிக்கா டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி வெற்றி பெற்றிருந்திருக்கும். அதற்குள் மழை புகுந்து கெடுத்து விட்டது.
இது குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில், 'உலக கோப்பை போட்டிகளில் எங்களுக்கும் மழைக்கும் ராசியே இல்லை. இன்னும் 12 பந்து வீசப்பட்டிருந்தால் சாதகமான முடிவு கிடைத்திருக்கும். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை எங்களால் அதிகபட்சமாக எது முடியுமோ அதை செய்து விட்டோம். அதனால் எங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை.
நல்லவேளையாக இது வாழ்வா-சாவா ஆட்டமில்லை. தொடரின் முதல் ஆட்டத்திலேயே இவ்வாறு நடந்து விட்டதால், இன்னும் எதுவும் எங்களது கையை விட்டு போய்விடவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்' என்றார்.
மார்க் பவுச்சர் கூறியது போல், ஏற்கனவே கடந்த 1992-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் (50 ஓவர்) இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்காவுக்கு 13 பந்தில் 23 ரன் தேவை என்ற நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து புதியதாக கொண்டு வரப்பட்ட மழை விதிப்படி 1 பந்தில் 23 ரன் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கண்ணீர் மல்க வெளியேறினர்.
அதன் பிறகு 2003-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மழை வந்த போது, டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி எவ்வளவு ரன் தேவை என்பது தவறாக கணக்கிட்டதன் விளைவு முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டது.
தொடர்ந்து 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியிலும் மழையால் ஓவர் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. எனவே ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது துரதிருஷ்டத்தின் அறிகுறியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.