பந்து வீசுவதற்கு முன் நின்ற அஷ்வின்... பயந்த ஸ்டீவ் ஸ்மித்...சிரித்த கோலி - வைரலாகும் வீடியோ...!
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி ,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் 2வது இன்னிங்சில் ஆட்டத்தின் 15வது ஓவரை அஷ்வின் வீசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த ஓவரின் 5வது பந்தை எதிர்கொள்ள லபுஸ்சாக்னே தயாராக இருந்தார். பந்துவீச்சாளர் முனையில் ஸ்டீவ் ஸ்மித் இருந்தார். அப்போது பந்தை வீச வந்த அஷ்வின் பந்தை வீசாமல் பாதியில் நிறுத்தினார்.
இதைபார்த்த ஸ்டீவ் ஸ்மித், அஷ்வின் ரன் அவுட் முயற்சி மேற்கொண்டாரோ என்ற பயத்தில் கிரீசுக்குள் ஓடி வந்தார். இதைப்பார்த்து கொண்டிருந்த இந்திய வீரர் விராட் கோலி கைதட்டி சிரித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.