இங்கிலாந்தில் உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட்டில் புஜாரா 174 ரன்கள் குவித்து அசத்தல்
|இங்கிலாந்தில் உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட்டில் புஜாரா 174 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஹோவ்,
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் சஸ்செக்ஸ் அணிக்காக விளையாடுகிறார். தற்போது அங்கு ராயல் லண்டன் கோப்பைக்கான ஒரு நாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் வார்விக் ஷைர் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 79 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்த புஜாரா நேற்று மற்றொரு ஆட்டத்திலும் இதே போல் அதிரடி காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சர்ரே அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சஸ்செக்ஸ் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 378 ரன்கள் குவித்தது. இதில் கேப்டனாக களம் புகுந்த புஜாரா 131 பந்துகளில் 20 பவுண்டரி, 5 சிக்சருடன் 174 ரன்கள் விளாசி அசத்தினார். போட்டி நடந்த ஹோவ் மைதானம் கொஞ்சம் சிறியது. அதை சரியாக பயன்படுத்தி ரன்வேட்டை நடத்திய புஜாராவுக்கு லிஸ்ட் ஏ வகை எனப்படும் 50 ஓவர் கிரிக்கெட்டில் இதுவே சிறந்த ஸ்கோராகும். இந்த வகை போட்டியில் அவரது 13-வது சதமாக இது பதிவானது.