"கோப்பை எனக்கு தான்"- காற்றில் சரிந்த கோப்பையை லாவகமாக தூக்கிய வில்லியம்சன்- வீடியோ
|டி20ஐ தொடர் தொடங்குவதற்கு கேன் வில்லியம்சன் மற்றும் பாண்டியா கோப்பை அறிமுக விழாவில் கலந்து கொண்டனர்.
வெல்லிங்டன்,
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் டி20ஐ தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இரு அணிகளின் கேப்டன்களான கேன் வில்லியம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் வழக்கமான கோப்பை அறிமுக விழாவில் கலந்து கொண்டனர்.
இருவரும் கோப்பையுடன் புகைப்படங்களுக்கு 'போஸ்' கொடுக்க தயாராகிக்கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதனால் கோப்பை வைக்கப்பட்டு இருந்த அட்டை காற்றில் சரிந்தது. இதனால் கோப்பையும் சரிந்த நிலையில், உடனடியாக சுதாரித்து கொண்ட கேன் வில்லியம்சன் கோப்பையை லாவகமாக பிடித்துக்கொண்டார். பாண்டியா தனது பக்கம் இருந்த அட்டை பாகங்கள் பிரியாமல் இருக்கும்படி அதனை பிடித்துக்கொண்டார்.
வில்லியம்சன் கோப்பையை பிடித்த கையோடு, "கோப்பை எங்கள் அணிக்கு தான்" என்பது போல பாண்டியாவிடம் புன்னகையோடு தெரிவித்தார். இதை கேட்ட பாண்டியாவும் பதிலுக்கு புன்னகைத்தார். இது குறித்த வீடியோ காட்சியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.