பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4-வது சதம் அடித்த வார்னர்
|வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக சதம் அடித்திருக்கிறார்.
பெங்களூரு,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் கோதாவில் குதித்தன. ஆஸ்திரேலிய அணியில் மாற்றமில்லை. பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கானுக்கு பதிலாக உஸ்மா மிர் சேர்க்கப்பட்டார்.
'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி டேவிட் வார்னரும், மிட்செல் மார்சும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். குறைவான பவுண்டரி தூரம், பேட்டிங்குக்கு சொர்க்கமான ஆடுகளம் என்று எதிர்பார்த்தபடியே பேட்ஸ்மேன்கள் ரன்மழை பொழிந்தனர்.
இதில் வார்னர் பக்கம் அதிர்ஷ்ட காற்றும் வீசியது. அவர் 10 ரன்னில் இருந்த போது 'மிட் ஆன்' திசையில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை உஸ்மா மிர் தவற விட்டார். அதற்குரிய விளைவை பாகிஸ்தான் உடனடியாக அனுபவித்தது. பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட வார்னர், பாகிஸ்தான் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினார். ஹாரிஸ் ரவுப்பின் ஒரே ஓவரில் இருவரும் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினர். அவரது இன்னொரு ஓவரில் 2 சிக்சர் பறந்தன. பந்துகளை நாலாபுறமும் தெறிக்கவிட்டதால் ஸ்கோர் மளமளவென எகிறியது. 29.2 ஓவர்களில் அந்த அணி 200-ஐ தொட்டது. இருவரும் ஒரே ஓவரில் சதத்தை ருசித்தனர். முதலில் வார்னர் தனது 21-வது சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த பந்தில் மிட்செல் மார்ஷ் தனது 2-வது சதத்தை எட்டினார். அதன் பிறகும் வார்னரின் ருத்ரதாண்டவம் நீடித்தது.
இவர்கள் களத்தில் நின்றது வரை ஆஸ்திரேலியா எளிதில் 400-ஐ கடக்கும் என்பதே கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் அவர்களின் ஸ்கோர் சற்று தளர்ந்தது.
தொடக்க விக்கெட்டுக்கு 259 ரன்கள் (33.5 ஓவர்) சேர்த்த நிலையில் இந்த ஜோடியின் ஆதிக்கத்தை ஒரு வழியாக வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது பந்து வீச்சில் இரு சிக்சர் விரட்டிய மிட்செல் மார்ஷ் (121 ரன், 108 பந்து, 10 பவுண்டரி, 9 சிக்சர்) அதே ஓவரில் கேட்ச் ஆனார். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு 200 ரன்னுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற பெருமையை வார்னர்- மார்ஷ் பெற்றனர். 2-வது விக்கெட்டுக்கு வந்த மேக்ஸ்வெல் (0) முதல் பந்திலேயே அவசரப்பட்டு தூக்கியடித்து கேட்ச் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த ஸ்டீவன் சுமித்தும் (7 ரன்) நிலைக்கவில்லை.
மறுமுனையில் டேவிட் வார்னருக்கு இரட்டை சதம் அடிக்க பிரகாசமான வாய்ப்பு தென்பட்டது. ஆனால் 43-வது ஓவரில் வார்னர் (163 ரன், 124 பந்து, 14 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் ஆகிப்போனார். பின்வரிசை வீரர்களில் ஸ்டோனிஸ் (21 ரன்) தவிர யாரும் சோபிக்கவில்லை. கடைசி 7 ஓவர்களில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 37 ரன் மட்டுமே எடுத்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 367 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அணியின் சிறந்த ஸ்கோராக இது பதிவானது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக்கும், இமாம் உல்-ஹக்கும் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். அப்துல்லா ஷபிக் 64 ரன்னிலும் (61 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), இமாம் உல்-ஹக் 70 ரன்னிலும் (71 பந்து, 10 பவுண்டரி) மார்கஸ் ஸ்டோனிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
இதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்த பாகிஸ்தானுக்கு வலுவான ஒரு இன்னிங்சை வெளிப்படுத்தும் அளவுக்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் அழுத்தமாக காலூன்றவில்லை. கேப்டன் பாபர் அசாம் 18 ரன்னில் ஜம்பாவின் சுழலில் சிக்கினார். முகமது ரிஸ்வான் (46 ரன்), சாத் ஷகீல் (30ரன்), இப்திகர் அகமது (26 ரன்) ஆகியோரால் ஸ்கோர் 300-ஐ எட்டியது மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆறுதலாகும். 45.3 ஓவர்களில் அந்த அணி 305 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கம்மின்ஸ், ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். பாகிஸ்தானுக்கு 2-வது தோல்வியாகும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 14 பவுண்டரி, 9 சிக்சருடன் 163 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் 36 வயதான டேவிட் வார்னர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
* வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 4 ஆட்டங்களில் (130 ரன், 179 ரன், 107 ரன், 163 ரன்) தொடர்ச்சியாக சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் குறிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 4 சதம் அடித்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு இந்தியாவின் விராட் கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இச்சாதனையை படைத்திருக்கிறார்.
* உலகக் கோப்பையில் வார்னரின் 5-வது சதம் இதுவாகும். உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரரான ரிக்கிபாண்டிங்கின் (5 சதம்) சாதனையை அவர் சமன் செய்தார். ஒட்டுமொத்தத்தில் ரோகித் சர்மா (7 சதம்), சச்சின் தெண்டுல்கர் (6) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
* வார்னர் உலகக் கோப்பையில் 3 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2015-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 178 ரன்களும், 2019-ம் ஆண்டில் வங்காளதேசத்துக்கு எதிராக 166 ரன்களும் சேர்த்துள்ளார். வேறு எந்த பேட்ஸ்மேனும் ஒரு முறைக்கு மேல் 150 ரன்களுக்கு அதிகமாக எடுத்ததில்லை.
* வார்னர்- மிட்செல் மார்ஷ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் திரட்டியது. உலகக் கோப்பையில் தொடக்க விக்கெட்டுக்கு ஒரு ஜோடியின் 2-வது அதிகபட்சம் இதுவாகும். இந்த வரிசையில் இலங்கையின் தில்ஷன்- தரங்கா 2011-ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக 282 ரன்கள் எடுத்தது முதலிடத்தில் இருக்கிறது.
* ஆஸ்திரேலியா மொத்தம் 19 சிக்சர்கள் விளாசி அமர்க்களப்படுத்தியது. ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் தங்களது முந்தைய அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை (இதே மைதானத்தில் 2013-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக 19 சிக்சர்) சமன் செய்தது.
* ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் நேற்று தனது 32-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் பரிசாக இந்த சதம் (121 ரன்) அவருக்கு கிட்டியிருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பிறந்த நாள் அன்று சதம் அடித்த 2-வது வீரர் மார்ஷ் ஆவார். ஏற்கனவே நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் தனது 27-வது வயது பிறந்த போது, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 131 ரன்கள் எடுத்திருந்தார்.