100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய வார்னர்...!
|தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி வார்னருக்கு 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.
மெல்போர்ன்,
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் ஆகும்.
இதில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் கவாஜா 1 ரன்னிலும், லபுஸ்சேன் 14 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து வார்னர், ஸ்மித் இணை நேர்த்தியாக ஆடி ரன்களை குவித்து வருகின்றனர். இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் தனது 25வது சதத்தை அடித்து அசத்தி உள்ளார். இந்த சதத்தின் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 8வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.