உலகக்கோப்பை தொடரில் இவர் தான் அதிக விக்கெட்டுகள் எடுப்பார் - பாக். வீரரை புகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்
|இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
மும்பை,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
தொடரின் தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.
உலகக்க்கோப்பை தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உலகக்கோப்பையை வெல்வது யார், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை, அதிக ரன் எடுக்கும் வீரர், அதிக விக்கெட் வீழ்த்தும் வீரர் குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி தான் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவார் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
வரும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி தான் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவார். ஏனெனில் நான் அவரை பாகிஸ்தானில் பார்த்துள்ளேன். குறிப்பாக பிஎஸ்எல் தொடரில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
அப்போது அவருடைய அதிகப்படியான வளர்ச்சியை நான் அருகிலிருந்து கண்டுள்ளேன். அவர் மிகவும் நேர்த்தியான வீரர். மேலும் அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர். இவ்வாறு அவர் கூறினார்.