விசா பிரச்சனை; ராஜ்கோட் விமான நிலையத்தில் இங்கிலாந்து வீரர் தடுத்து நிறுத்தம்
|பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ராஜ்கோட்,
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று டொடர் 1-1 என சமனில் இருக்கிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.2-வது டெஸ்ட் கடந்த 3-ந்தேதி முடிவடைந்தது. 3-வது டெஸ்ட் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வரும் 15-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த போட்டிக்கு 2 வாரங்கள் இருந்ததால் இங்கிலாந்து அணி 2-வது டெஸ்ட் முடிந்தவுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபிக்கு சென்றது.
அபுதாபியில் 10 நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு இங்கிலாந்து அணி நேற்று இந்தியா திரும்பியது. அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இங்கிலாந்து வீரர்கள் ராஜ்கோட் வந்தனர். அப்போது இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீரர் ரேகான் அகமது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
விசா பிரச்சினையால் அவரிடம் விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரேகான் அகமது ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் ஏற்கனவே இந்தியா வந்து சென்றிருந்தார். தற்போது 10 தினங்களுக்குள் மீண்டும் வந்ததால் விசா பிரச்சினையில் விசாரிக்கப்பட்டார்.
நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உள்ளூர் அதிகாரிகள் அவருக்கு 2 நாள் விசா வழங்கினார்கள். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது, அடுத்த 2 தினங்களுக்குள் விசாவை மீண்டும் செயல்படுத்த இங்கிலாந்து அணிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரேகான் அகமது மற்ற வீரர்களுடன் நுழைய அனுமதிக்கப்பட்டார்.
இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார். ஏற்கனவே இங்கிலாந்தை சேர்ந்த சோயிப் பஷீர் விசா பிரச்சினையில் சிக்கி இருந்தார். இதனால் அவரால் முதல் போட்டியில் ஆட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.