சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலியின் மகத்துவம் குறைந்தே காணப்படுகிறது - இந்திய முன்னாள் வீரர்
|இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.
மும்பை,
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள விராட் கோலி சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதுமே சுமாராக செயல்பட்டு வருவதாக இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். எனவே இந்த வருடத்தின் முதல் போட்டியில் பெங்களூரு வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி 20 ஓவர்களும் பேட்டிங் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஐ.பி.எல் தொடரில் வெளிப்படுத்திய ஒட்டுமொத்த செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் மகத்துவம் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தே காணப்படுகிறது. அது பேட்டிங் செய்வதற்கு சவாலான மைதானமாகும். குறிப்பாக அங்கே தொடக்க வீரர்கள் வேடிக்கையான டென்னிஸ் பந்து போன்ற பவுன்ஸை எதிர்கொள்வது சவாலாகும். மேலும் ஸ்டம்ப் லைனில் பந்து வீசி சவாலை கொடுக்கும் மகத்தான ஜடேஜா சென்னை அணியில் இருக்கிறார்.
அவர் சாதாரண பந்தை கீழே கொண்டு வந்து திருப்புவார் என்பதால் அதை எதிர்கொள்வது சவாலாகும். எனவே 20 ஓவர்களும் பேட்டிங் செய்வதற்கு விராட் கோலி தயாரானால் மட்டுமே போட்டியில் வெற்றி பெறக்கூடிய செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியும். ஏனெனில் நீங்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 2 சதங்கள் அடித்தாலும் சேப்பாக்கத்தில் அதற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அது போக 2016 போல இம்முறையும் விராட் கோலி விளையாடுவது முக்கியம். ஏனெனில் விராட் கோலி ரன்கள் அடித்தால் அவருடைய அணியும் முன்னோக்கி நடக்கும். அப்போதும் பெங்களூரு கோப்பையை வெல்லுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்களுடைய அணியில் விராட் கோலி, மேக்ஸ்வெல், கிரீன், படிதார் போல் தனிநபராக அசத்தக்கூடிய வீரர்கள் இருக்கின்றனர். எனவே 2016 போல விராட் கோலி அடங்கிய டாப் ஆர்டர் அதிகமாக ரன்கள் குவித்தால் மட்டுமே பெங்களூரு அணியால் முன்னோக்கி செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.