விராட் கோலியை பற்றி விமர்சிப்பவர்கள் கிரிக்கெட்டின் அடிப்படை கூட தெரியாதவர்கள் - பயிற்சியாளர் பேட்டி
|விராட் கோலியை பற்றி விமர்சிப்பவர்கள் கிரிக்கெட்டின் அடிப்படை கூட தெரியாதவர்கள் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடர் ஆரம்பித்த கால கட்டத்திலிருந்தே நட்சத்திர வீரர் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக ஏராளமான சாதனை படைத்துள்ள அவர், நடப்பு சீசனிலும் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 316 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படாததால் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
அதேபோல விராட் கோலி போராடி அடிக்கும் ரன்களையும் பவுலர்கள் பந்து வீச்சில் எதிரணிக்கு வாரி வழங்கி வருகின்றனர். அதனால் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடி வருகிறது. ஆனால் பெங்களூருவின் இந்த தோல்விக்கு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலிதான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் விராட் கோலியை பற்றி விமர்சிப்பவர்கள் கிரிக்கெட்டின் அடிப்படை தெரியாதவர்கள் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-
"இப்படி முட்டாள்தனமாக சொல்பவர்களுக்கு போட்டியின் சூழல், நிலைமை, அணி எப்படி போராடுகிறது என்பதைப் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன். அவர்கள் செய்திகளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளம்பரத்திற்காக மட்டுமே பேசுகின்றனர். நீங்கள் ஒரு சாதாரண வீரரைப் பற்றி பேசினால் அது உங்களை தலைப்புச் செய்திகளில் கொண்டு வருவதில்லை.
ஆனால் விராட் கோலி போன்ற ஒருவரைப் பற்றி பேசினால் அது உங்களை தலைப்புச் செய்தியில் கொண்டு வரும். அப்படி பேசுபவர்களை சிலர் இயக்குகின்றனர். எனவே ரசிகர்கள் அல்லது உண்மையான ஆய்வாளர்கள் என்ற பெயரில் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் கிங் என்பவர் எப்போதும் கிங்-ஆகவே இருப்பார். அவரை விமர்சிப்பவர்கள் கிரிக்கெட்டின் அடிப்படை கூட தெரியாதவர்கள் " என்று கூறினார்.