கவுதம் கம்பீருடனான மோதலுக்கு பின் பிசிசிஐக்கு கடிதம் எழுதிய விராட் கோலி...!
|ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டதாக விராட்கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.
மும்பை
சமீபத்தில், லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
மைதானத்தில் நடந்த சம்பவத்தை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை விடுத்து வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு மோதல் போக்கை கடைப்பிடித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.
இதை தொடர்ந்து போட்டி விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக விராட்கோலி, கவுதம் கம்பீர் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதத்தையும், நவீன் உல்-ஹக்குக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தையும் ஐ.பி.எல். நிர்வாகம் அபராதமாக விதித்தது.
இதனால் விராட்கோலிக்கு ரூ.1 கோடியும், கம்பீருக்கு சுமார் ரூ.25 லட்சமும் இழப்பு ஏற்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அளவுக்கு அதிகமான ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டதாக விராட்கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோலி கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அவர் பிசிசிஐக்கு எழுதிய கடிதத்தில், தான் நிரபராதி என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கோலி கூறியுள்ளார்.