< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை தொடரின் முதலிலும் இறுதியிலும் தங்கப்பதக்கம் பெற்ற விராட் கோலி!
கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் முதலிலும் இறுதியிலும் தங்கப்பதக்கம் பெற்ற விராட் கோலி!

தினத்தந்தி
|
20 Nov 2023 11:17 AM IST

உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது.

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.

இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார். அதனால் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கான முதல் ஆட்டத்திலும் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்