< Back
கிரிக்கெட்
விராட் கோலி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தான வீரராக இருப்பார் - இர்பான் பதான்
கிரிக்கெட்

விராட் கோலி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தான வீரராக இருப்பார் - இர்பான் பதான்

தினத்தந்தி
|
22 Jan 2024 12:54 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில், வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தான வீரராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ;- 'விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். கடினமான தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களிலே அசத்திய அவர் நிச்சயம் இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

அதோடு விராட் கோலி இந்திய மண்ணில் மிகவும் அசத்தலாக விளையாட கூடியவர். தற்போது அவரது புட் வொர்க் மற்றும் அணுகுமுறையில் சிறிது மாற்றத்தை அவர் செய்துள்ளார். எனவே இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தான வீரராக இருப்பார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அவர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறார்' என்றார்.

மேலும் செய்திகள்