மீண்டும் லண்டன் புறப்பட்ட விராட் கோலி...காரணம் என்ன தெரியுமா..?
|டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கான பாராட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது.
மும்பை,
17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இதன் காரணமாக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கான பாராட்டு விழா பி.சி.சி.ஐ. சார்பில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் வெற்றிப் பேரணியில் ஈடுபட்டனர். மும்பையின் மரைன் டிரைவ் பகுதியிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த வெற்றிப் பேரணிக்கு பின், இந்திய அணி வான்கடே மைதானத்தை அடைந்தது. இதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வான்கடே மைதானத்தில் கூடிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இந்திய வீரர்கள் வலம் வந்தனர். அப்போது விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் இணைந்து நடனம் ஆடி மகிழ்ந்தனர். இதன்பின் இந்திய வீரர்கள் தங்களின் வீட்டிற்கு புறப்பட்டனர்.
இந்நிலையில் விராட் கோலி அங்கிருந்து நேராக லண்டன் புறப்பட்டுள்ளார். அதற்கான காரணம் என்னவெனில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, மகள் வாமிகா, மகன் அகாய் ஆகியோர் லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் ஆடிய போட்டியின் போது அனுஷ்கா சர்மா அமெரிக்கா வந்திருந்தார். இதன்பின் அனுஷ்கா சர்மா இந்தியாவுக்கு திரும்பவில்லை. இதனால் மனைவி மற்றும் குழந்தைகளை சந்திப்பதற்காக விராட் கோலி உடனடியாக லண்டனுக்கு புறப்பட்டுள்ளார்.