< Back
கிரிக்கெட்
கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி நீக்கம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் பரபரப்பு கருத்து
கிரிக்கெட்

கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி நீக்கம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் பரபரப்பு கருத்து

தினத்தந்தி
|
13 Aug 2023 4:19 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி குறித்து பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப்.

இஸ்லாமாபாத்,

இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ந்தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சொந்த மண்ணில் நடக்கும் இந்த உலகக்கோப்பையை வென்றுவிட வேண்டும் என்று இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. இந்திய அணி ஐசிசி தொடர்களில் கோப்பையை கைப்பற்றி 11 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. கடைசியாக தோனி தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு ஐசிசி தொடர்களில் சாம்பியன் கோப்பை வெல்வது கனவாகவே உள்ளது.

இந்நிலையில் ஐசிசி தொடர்களில் இந்தியாவின் நிலை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் தனது யூடியூப் பக்கத்தில், 'இந்திய அணி இன்னும் சிறப்பான அணியாக இருக்கிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தாலும், ஐசிசி கோப்பை தொடர்ந்து அணியை ஏமாற்றி வருகிறது. கோலி மற்றும் ரோகித் போன்ற தலை சிறந்த கேப்டன்கள் கூட இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தர முடியவில்லை' என தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் கோலியின் கேப்டன் பதவி குறித்து, 'இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் கோலி. ஆனால் அவராலும் இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஐசிசி பட்டத்தை பெற்று தர முடியவில்லை. அவர் டி20 மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பின் ரோகித் சர்மா 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட் கோலி வெற்றி பெற விரும்பினார். ஆனால் அணியில் ஏற்பட்ட உள் பிரச்சினைகளால் அவரால் முடியவில்லை. மேலும் அவர் விரும்பிய வீரர்கள் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்த முடியவில்லை' என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்