டி20 உலக கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் - பார்தீவ் பட்டேல்
|டி20 உலக கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்தீவ் பட்டேல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது:-
ஆசிய கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கியது போல டி20 உலக கோப்பையிலும் அவர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதால் அணியில் சமநிலை வருகிறது. கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவரும் இரு வேறு விதமான வீரர்கள்.
ஒரு வீரர் தொடக்கத்தில் இருந்தே மிகவும் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். கோலி இடைவெளிகளை கண்டறிந்து பவுண்டரிகள் அடிக்கும் வீரர். கோலியும் ரோகித்தும் முதல் 6 ஓவர்கள் விளையாடினால் ஆஸ்திரேலிய சூழ்நிலையில் கூட அவர்களால் 50 ரன்களுக்கு மேல் எடுக்க முடியும் என நான் கருதுகிறேன்.
ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் விராட் கோலி நன்கு ஆடக் கூடியவர் என்றார். முதல் ஆறு ஓவர்களில் உங்களின் சிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடலாம். உங்கள் கைகளில் விக்கெட்டுகள் இருந்தால் உங்களால் எந்த அணிக்கு எதிராகவும் மிகச்சிறப்பாக ஆடி வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விராட் கோலி நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.