சச்சின் போலவே விராட் கோலியும் கொஞ்சம் அதில் தடுமாறுகிறார் - இந்திய முன்னாள் வீரர்
|வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 287 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர். இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக முதல் இன்னிங்சில் 6 ரன்களில் அவுட்டான கோலி, 2வது இன்னிங்சில் 17 ரன்கள் அடித்த நிலையில் நடுவரின் தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை போலவே அவ்வப்போது சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் விராட் கோலி தடுமாறுவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இருப்பினும் வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் விராட் கோலி அசத்துவதாக மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே வெளிநாட்டு மண்ணில் விராட் கோலி பெரிய ரன்கள் குவிப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியாவில் பேட்டிங் செய்வதை விராட் கோலி அவ்வளவாக ரசிக்கவில்லை. சச்சின் டெண்டுல்கரை போலவே அவர் சொந்த மண்ணுக்கு வெளியே நன்றாக விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக தென் ஆப்பிரிக்காவில் அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். வெளிநாட்டு சூழ்நிலைகளில் அவர் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதனால் பரவாயில்லை. சொந்த மண்ணை விட வெளிநாட்டு மண்ணில் ரன்களை எடுப்பது எவ்வளவோ மேல்" என்று கூறினார்.