விராட் கோலி அதை செய்திருக்க கூடாது - இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஏமாற்றம்
|விராட் கோலி கடந்த 2022-ல் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மும்பை,
இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
முன்னதாக கேப்டனாகவும் விராட் கோலி இந்தியாவுக்காக வெற்றிகரமாக செயல்பட்டார் . குறிப்பாக 2014-ம் ஆண்டு தோனி விலகியபோது இந்தியா ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் ஏழாவது இடத்தில் திண்டாடியது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 2016 - 2021 வரை தொடர்ந்து இந்தியாவை உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாற்றினார்.
அத்துடன் அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. இருப்பினும் உலகக்கோப்பையை வென்று கொடுக்காததால் எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து விராட் கோலி டி20 கேப்டன்ஷிப் பதவியிலிருந்து மட்டும் விலகினார். அதை பயன்படுத்திய பிசிசிஐ வெள்ளைப்பந்து அணிக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று கருதி விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பறித்தது. அதனால் மனமுடைந்த விராட் கோலி 2022-ல் தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்ததும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "தனிப்பட்ட முறையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் 65 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் அதைத் தொடர்ந்து செய்திருக்க வேண்டும். அதை விட விராட் கோலி தலைமையில் இந்தியா வெளிநாடுகளில் முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தியது.
இந்தியா தங்களது சொந்த மண்ணில் 75% வெற்றி பெறும் என்பது எதிரணிகளுக்கு தெரியும். மேலும் சிறந்த பிட்னஸ் தகுதியை அடைந்த அவர் அனைவருக்கும் சவால் விட்டார். அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அத்துடன் கேப்டனாக இருந்தபோதுதான் அவர் பேட்ஸ்மேனாகவும் அதிக ரன்கள் எடுத்தார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.