தோனி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இதுதான்- மனம் திறந்து உருக்கமாக பேசிய கோலி..!
|கோலி தான் டெஸ்ட் கேப்டன்சியை உதறிய போது தோனியிடம் இருந்து மட்டுமே தனக்கு செய்தி வந்தததாக தெரிவித்து இருந்தார்,
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி வரும் நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்வதில் மிகவும் முக்கிய பங்காக இருந்ததவர் விராட் கோலி. பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்த இவர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் ரன்கள் குவிக்க திணறி வந்த கோலி ஆசிய கோப்பையில் சதம் அடித்து வலுவாக மீண்டு வந்தார். அதை தொடர்ந்து தற்போது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
விராட் கோலியின் இந்த சிறப்பான கம்பேக்கிற்கு தோனியும் முக்கிய காரணம் எனக்கூறலாம். ஏனெனில் கடந்த மாதம், விராட் கோலி தான் டெஸ்ட் கேப்டன்சியை உதறியது பற்றிக் கூறும்போது, "நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், கடந்த காலத்தில் நான் விளையாடிய ஒருவரிடமிருந்து மட்டும் எனக்கு செய்தி வந்தது. அது எம்எஸ் தோனி.
நிறைய பேர் என் செல்போன் எண்ணை வைத்திருக்கிறார்கள், நிறைய பேர் எனக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்கள், நிறைய பேர் என் விளையாட்டைப் பற்றி டிவியில் பேசுகிறார்கள். ஆனால் எனது எண்ணை வைத்திருந்தவர்களில் தோனியைத் தவிர வேறு யாரிடமிருந்தும் எனக்கு செய்தி வரவில்லை என அவர்களது நட்பு குறித்து உருக்கமாக பேசினார்.
இந்த நிலையில் நேற்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலி தோனி குறித்து பல்வேறு விஷயங்களை தற்போது மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, "நீங்கள் மனவலிமையானவர் என நினைப்பவர்களும், அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை கேட்க மறந்துவிடுகிறார்கள் என தோனி தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" என்றார்.
மேலும் தோனி உடனான உறவு எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்றும் என் மீது உண்மையான அக்கறையுடன் என்னை அனுகுபவர் தோனி மட்டுமே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது என தோனி குறித்து விராட் கோலி மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.