ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி
|ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.
அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மேலும் பல சாதனைகள் படைத்து வரும் அவர், தனி ஆளாக போராடி இந்திய அணிக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். அத்துடன் உலகின் பல பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் தடுமாறுவது வழக்கமாகும்.
ஆனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டதட்ட 50 என்று அற்புதமான பேட்டிங் சராசரியை கொண்ட ஒரே வீரராக விராட் கோலி ஜொலித்து வருகிறார். இருப்பினும் சுயநலத்துடன் சொந்த சாதனைக்காக விளையாடுகிறார் என்ற விமர்சனங்களை விராட் கோலி அவ்வப்போது சந்திப்பது வழக்கமாகும். அதன் உச்சமாக டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விடுங்கள் என்று சிலர் மனசாட்சியின்றி பேசுவதையும் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கெல்லாம் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்து வரும் அவர், நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக வலம் வருகிறார்.
இந்நிலையில் ஓய்வு குறித்து மனம் திறந்துள்ள விராட் கோலி, ஓய்வுக்கு பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
"விளையாட்டு வீரர்களான எங்களுடைய கெரியரும் ஒரு தேதியில் முடிவுக்கு வரும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே 'ஒரு குறிப்பிட்ட நாளில் இதை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று நான் நினைத்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. ஏனெனில் நான் காலத்திற்கும் விளையாட முடியாது.
எனவே குறையாக இருக்கும் எந்த விஷயத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்ய மாட்டேன். ஒருமுறை எனது கெரியரை முடித்தவுடன் நான் போய் விடுவேன். அதன் பின் நீங்கள் என்னை கொஞ்ச காலம் பார்க்க மாட்டீர்கள். எனவே தற்போது விளையாடும் வரை என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன். அதுதான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது" என்று கூறினார்.