விராட் கோலி அந்த குறையை சரி செய்ய வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
|விராட் கோலியின் பேட்டிங்கில் உள்ள ஒரு சில குறைகளை சரி செய்ய வேண்டும் என பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் வங்காளதேச அணிக்கு எதிராகவும் அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாட உள்ள இந்திய அணி அதன் பிறகு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடர்களில் எல்லாம் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் விராட் கோலி பேட்டிங்கில் அசத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங்கில் உள்ள ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "விராட் கோலி கடந்த நான்கு ஆண்டுகளாகவே இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி வருகிறார். வங்காளதேச அணியில் இரண்டு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் வேளையில் அவர்களுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்று கோலி திட்டம் தீட்ட வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் கோலிக்கு இது புரியும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு நேரத்தில் சவால்கள் வரும்.
அந்த வகையில் தற்போது விராட் கோலி இந்த சவாலை ஏற்றுக் கொண்டு மெருகேறுவார் என்று நம்புகிறேன். இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது கடினம்தான் இருந்தாலும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர் அதனை சரியான முறையில் கையாண்டு பயிற்சி மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நல்லது. நிச்சயம் விராட் கோலி இதை நினைவில் கொள்வார்" என்று கூறினார்.