< Back
கிரிக்கெட்
வங்காளதேச தொடரில் அவர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறலாம் - இந்திய முன்னாள் வீரர்

image courtesy: AFP

கிரிக்கெட்

வங்காளதேச தொடரில் அவர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறலாம் - இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
14 Sept 2024 4:37 PM IST

இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறி வருவதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் வங்காளதேச அணிக்கு எதிராகவும் அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாட உள்ள இந்திய அணி அதன் பிறகு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர்களில் எல்லாம் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் விராட் கோலி பேட்டிங்கில் அசத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. விராட் கோலி இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக விளையாட உள்ளார். ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. எனவே இத்தொடரில் அவர் சிறப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி கொஞ்சம் தடுமாறி வருவதாக இந்திய முன்னாள் வீரர் சுப்பிரமணியன் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். அது போன்ற சூழ்நிலையில் 2024 துலீப் கோப்பையில் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் தொடரில் களமிறங்குவதால் வங்காளதேச ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறக் கூடும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இந்தியாவின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழும் விராட் கோலி அனுபவத்தால் சிறப்பாக விளையாடி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல உதவுவார் என்றும் பத்ரிநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பையில் விராட் கோலி ஒரு போட்டியில் விளையாடி வந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் வங்காளதேசத்திடம் நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்களிடம் மூன்றில் ஒரு இடது கை ஸ்பின்னர் இருப்பார்கள். அவர்கள் இந்திய தொடரில் கண்டிப்பாக வருவார்கள். அதனாலேயே விராட் கோலி ஒரு துலீப் கோப்பை விளையாடி வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

சமீப காலங்களில் நாம் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறியுள்ளோம். இருப்பினும் சிறந்த வீரரான விராட் கோலி லட்சியங்களுடன் வருவார். இந்தியா அடுத்ததாக பெரிய டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இப்போதும் விராட் கோலி இந்தியாவின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று நம்புகிறேன். எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் இந்தியா சிறப்பாக விளையாட விராட் கோலி சாவியாக இருப்பார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்