இந்திய அணியில் 4-வது இடத்தில் விளையாடக்கூடிய சிறந்த வீரர் இவர் தான்...! டி வில்லியர்ஸ் அதிரடி கருத்து
|விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்கி 210 போட்டிகளில் விளையாடி 10777 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 39 சதங்களும் 55 அரை சதங்களும் அடங்கும்.
புதுடெல்லி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு இதுவரை 4-வது இடத்தில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை. யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து அதற்கு பொருத்தமான வீரரை கண்டுபிடிக்க இந்திய அணி போராடி வருகிறது. 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், அந்த இடத்தில் யார் பேட்டிங் செய்வார்கள் என்பது பற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
இந்திய அணியில் நம்பர் நான்காவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்று விவாதம் சென்று கொண்டிருக்கிறது. நான் விராட் கோலி அந்த இடத்தில் விளையாடப் போகிறார் என்ற வதந்தியையும் கேள்விப்பட்டேன்.
அது உண்மையாக இருந்தால் நிச்சயமாக அதற்கு பெரிய ஆதரவை நான் வழங்குவேன். விராட் கோலி அந்த இடத்திற்கு சரியான நபராக இருப்பார். அணியின் ஒட்டுமொத்த இன்னிங்சை ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய வீரராக அவர் திகழ்வார்.
விராட் கோலிக்கு நீங்கள் எந்த ரோலை கொடுத்தாலும் அவர் நடு வரிசையில் சரியாக செய்வார். ஆனால் இது அவருக்கு பிடிக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் மூன்றாவது வீரராக களம் இறங்குவது விராட் கோலிக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது.
அவர் அடித்த பெரும்பான்மையான ரன்களும் அந்த இடத்தில் தான் . ஆனால் அணிக்கு நீங்கள் அந்த இடத்தில் தேவை என்றால் கண்டிப்பாக நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
விராட் கோலி நான்காவது வீரராக ஒரு நாள் கிரிக்கெட்டில் களமிறங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்த மாற்றத்தை செய்வது சரியாக இருக்காது என பல கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.
விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்கி 210 போட்டிகளில் விளையாடி 10777 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 39 சதங்களும் 55 அரை சதங்களும் அடங்கும்.
ஆனால் விராட் கோலி நான்காவது இடத்தில் வெறும் 39 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் மொத்தமாக அவர் 1767 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஏழு சதங்களும், எட்டு அரை சதங்களும் அடங்கும். மூன்றாவது இடத்தில் சராசரியாக 60 ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலி, நான்காவது இடத்தில் களமிறங்கி சராசரியாக 55 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதனால் விராட் கோலி மூன்றாவது இடத்தில் தொடர்ந்து விளையாடுவது சரியான விஷயமாக இருக்கும்.