பேட்டிங் மட்டுமல்ல அதிலும் விராட் கோலிதான் நம்பர் 1 - பாக். முன்னாள் வீரர் புகழாரம்
|விராட் கோலி தம்முடைய பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பிட்னஸ் அளவிலும் உலகின் நம்பர் 1 வீரராக திகழ்வதாக முகமது ஹபீஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
கராச்சி,
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.
அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அதேபோல நிறைய வெளிநாட்டவர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி தம்முடைய பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பிட்னஸ் அளவிலும் உலகின் நம்பர் 1 வீரராக திகழ்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது ஹபீஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அதை தற்போதைய பாகிஸ்தான் அணி பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"விராட் கோலி பற்றிய சிறிய விஷயத்தை நான் சொல்கிறேன். தன்னுடைய பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பிட்னஸ் அளவிலும் அவர் தனக்கென்று ஒரு தரத்தை உருவாக்கியுள்ளார். அதனாலேயே அவருடைய மாற்றம் எளிதாக தெரிகிறது. நீங்கள் எவ்வளவு அழுத்தத்தை போட்டாலும் அவர் அதை உள்வாங்கி பிட்டாக இருக்கிறார். 10 வருடங்களுக்கு பின்னால் திரும்பி விராட் கோலியை விட பிட்டாக இருந்த வீரரின் பெயரை என்னிடம் சொல்லுங்கள் பார்ப்போம். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அவர்தான் பிட்னசில் நம்பர் 1 வீரராக இருக்கிறார்.
அவர் தன்னை மாற்றிக்கொண்ட விதத்தை வைத்து ஒருவர் தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடும் தமக்கு யோயோ டெஸ்ட் மதிப்பெண் 17க்கு பதில் 16 வந்தால் பிரச்சனையில்லை என்று விராட் கோலியும் சொல்வார். இந்த தரத்தின் காரணமாகவே சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒட்டுமொத்த உலகிலும் விராட் கோலி ஒரு நட்சத்திரமாக கருதப்படுகிறார்" என்று கூறினார்.