தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த நிதிஷ் ரெட்டி
|சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வீரரான நிதிஷ் ரெட்டி, தோனி குறித்து ஒரு பேட்டியில் பேசிய விஷயங்கள் சர்ச்சையாக மாறி உள்ளது.
ஐதராபாத்,
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நல்ல ஆல் ரவுண்டராக விளங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, 303 ரன்களும், 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். அவரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்தனர்.
இதனிடையே சமீபத்தில் ஒரு பேட்டியில் , "தோனிக்கு திறமை உண்டு. ஆனால் டெக்னிக் இல்லை. விராட் கோலி அளவுக்கு தோனியிடம் டெக்னிக் இல்லை" என்று நிதிஷ் குமார் ரெட்டி பேசி இருந்ததாக வீடியோ பரவியது.
அது தோனி ரசிகர்கள் இடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. தோனியை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று குறிப்பிடுவது போல அவர் பேசியிருந்ததை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். சமூக வலை தளங்களில் நிதிஷ் குமாருக்கு எதிராக பலரும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர் தனது சர்ச்சை பேட்டி குறித்து தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், "நான் மகி பாயின் (தோனியின்) மிகப்பெரிய ரசிகன். என்னிடம் திறமை முக்கியமா? அல்லது மனநிலை முக்கியமா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. நான் மனநிலைதான் முக்கியம் என பதில் அளித்தேன். அப்போது தோனியை அதற்கு உதாரணமாக கூறினேன். ஒரு வெற்றியை தீர்மானிப்பதில் மனநிலை மிக முக்கிய பங்கு வகிப்பதாக நான் நம்புகிறேன். எனது முந்தைய பேட்டியில் நான் கூறியதை சிலர் முழுமையாக வெளியிடாமல் கத்தரித்து வெளியிட்டு வருகின்றனர். தவறான விஷயங்களை பரப்ப வேண்டாம். முழு கதையையும் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்" என விளக்கம் அளித்துள்ளார்.