விராட் கோலி அதிக ஈகோ கொண்ட ஒரு வீரர் - இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்
|இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய சொந்த மண்ணில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கலாம் என்ற ஈகோ இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் தெரிவித்துள்ளார். எனவே அந்த ஈகோவை அடக்கி இந்த தொடரில் விராட் கோலிக்கு சவால் கொடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-
"எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள். மேலும் நீங்கள் எப்போதுமே சிறந்த வீரர்களை அவுட் செய்ய விரும்புவீர்கள். விராட் கோலி அது போன்ற ஒரு வீரர். அவர் அதிக ஈகோ கொண்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் எதிரணி பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவிக்கலாம் என்று அவர் நினைப்பார். இதற்கு முந்தைய தொடர்களிலும் நாங்கள் மோதியுள்ளோம். எனவே இம்முறையும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அடுத்த சில வருடங்களில் எங்களுடைய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு நான் தலைவராக இருப்பேன் என்பதை உணர்ந்து அதற்கேற்றார்போல் பயிற்சிகள் செய்து வருகிறேன். தற்போது நல்ல முதிர்ச்சியடைந்துள்ள நான் இத்தொடரை மற்றுமொரு சாதாரண தொடராக நினைத்து பயிற்சி எடுக்கிறேன். தற்போதைக்கு எங்களுடைய பவுலிங் கூட்டணியின் தலைவராக நான் என்னை நினைக்கவில்லை. மாறாக சிறப்பாக விளையாடி அணிக்கு ஆதரவு கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.