< Back
கிரிக்கெட்
மெஸ்சி, ரொனால்டோ போல விராட் கோலி உலக அளவில் ஒரு சூப்பர் ஸ்டார் - ராஸ் டெய்லர் புகழாரம்
கிரிக்கெட்

மெஸ்சி, ரொனால்டோ போல விராட் கோலி உலக அளவில் ஒரு சூப்பர் ஸ்டார் - ராஸ் டெய்லர் புகழாரம்

தினத்தந்தி
|
29 May 2024 6:47 PM IST

ரொனால்டோ, மெஸ்சி போல விராட் கோலி விளையாட்டு உலகின் சூப்பர்ஸ்டார் என்று ராஸ் டெய்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.

வெலிங்டன்,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

இப்படி பல சாதனைகள் படைத்து வரும் அவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரராக சாதனை படைத்திருந்தார். ரொனால்டோ, மெஸ்ஸி ஆகிய கால்பந்து ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட 3-வது விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

இந்நிலையில் ரொனால்டோ, மெஸ்சி போல விராட்கோலி விளையாட்டு உலகின் சூப்பர்ஸ்டார் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் புகழாரம் சூட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

"வீரர்கள் பல்வேறு பொருட்களை தங்களுடைய சமூக வலைத்தளத்தில் இப்படி விளம்பரம் செய்வார்கள் என்று யார் 2008-ல் நினைத்திருப்பார்கள்? விராட் கோலி போன்றவர் உலக கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார். அவர் உலக அளவில் விளையாட்டு துறையின் ஒரு சூப்பர்ஸ்டார். இன்ஸ்டாகிராம் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் அவர் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருடன் இருக்கிறார்.

இப்போதெல்லாம் விளையாட்டு வீரர்கள் அதிகமாக விமர்சிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சினிமா நட்சத்திரங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் போன்ற பலரும் சமூக வலைத்தளத்தின் கீழ் இருக்கின்றனர். இது ஒரு மோசமான விஷயம் என்று நான் நினைக்கவில்லை" எனக் கூறினார்.

மேலும் செய்திகள்