ஒரு சதம் கூட அடிக்காமல் ஆயிரம் நாட்களை கடந்த விராட் கோலி- சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
|70 சதங்களை குவித்துள்ள விராட் கோலி, 3 ஆண்டுகளாக 71வது சதம் அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கோலி கடந்த 3 ஆண்டுகளாக சதங்கள் அடிக்க திணறிவருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை குவித்துள்ள விராட் கோலி, 3 ஆண்டுகளாக 71வது சதம் அடிக்க முடியாமல் திணறிவருகிறார். கடைசியாக 2019 நவம்பர 23-ல் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இன்று வரை சதமடிக்கவில்லை.
இன்றுடன் அவர் சதமடித்து 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. ஆயிரம் நாட்களாக கோலி ஒரு சதம் கூட அடிக்காதது குறித்து சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அவரது கடைசி சதத்திற்கு பிறகு அவர் 24 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக இந்த ஆண்டுகளில் அவர் 94 (ஆட்டமிழக்காமல்) அடித்துள்ளார். விராட் கோலியின் அடுத்த சதத்தை எதிர்பார்த்து இந்தியாவை கடந்து மற்ற நாடு கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.