< Back
கிரிக்கெட்
சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி
கிரிக்கெட்

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி

தினத்தந்தி
|
20 Sept 2024 10:03 PM IST

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவர்களில் 376 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் குவித்தனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் வெறும் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் அடித்துள்ளது. கில் 33 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய விராட் கோலி 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 12,000 ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் 243 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் சச்சின் 267 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. விராட் கோலி: 243 இன்னிங்ஸ்

2. சச்சின் டெண்டுல்கர்: 267 இன்னிங்ஸ்

3. குமார் சங்ககாரா: 269 இன்னிங்ஸ்

4. காலிஸ் - 271 இன்னிங்ஸ்

5.ரிக்கி பாண்டிங் - 275 இன்னிங்ஸ்

மேலும் செய்திகள்