விராட் கோலி மற்றும் ரோகித் செய்த செயல் நெஞ்சை தொடும் விதமாக அமைந்தது - வி.வி.எஸ்.லட்சுமணன்
|உலகக்கோப்பை வெல்வது கண்டிப்பாக சிறப்பான உணர்வு என்று வி.வி.எஸ். லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.
ஆனால் அங்கிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா கோப்பையை வென்று அசத்தியது. அந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதேபோல வீரராக வெல்லாத உலகக்கோப்பையை பயிற்சியாளராக வென்று ராகுல் டிராவிட் விடை பெற்றார்.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியதாக வி.வி.எஸ். லட்சுமணன் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்து போராடி வென்றது இந்திய அணியின் கேரக்டரை காட்டுவதாக அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் கோப்பையை வென்று ராகுல் டிராவிட் கையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கொடுத்தது நெஞ்சை தொடும் செயலாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது நாம் பினிஷிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. அங்கிருந்து தன்னம்பிக்கையுடன் போராடி தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வெற்றி பெற்றது மொத்த இந்திய அணியின் கேரக்டரை காட்டுகிறது. அதற்காக செய்த கடின உழைப்பு நம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வெளிப்படுத்திய கொண்டாட்டத்தில் தென்பட்டது. உலகக்கோப்பை வெல்வது கண்டிப்பாக சிறப்பான உணர்வு.
அதனுடைய உணர்வை நமது அணியில் இருந்த ஒவ்வொருவரும் காண்பித்தனர். ஹர்திக் பாண்ட்யா கடைசிப் பந்தை வீசியதும் கண்ணீர் விட்டு அழுததையும் ரோகித் சர்மா மைதானத்திலேயே விழுந்ததையும் நீங்கள் பார்த்தீர்கள். மொத்த நாடும் அந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்தது. குறிப்பாக கடந்த உலகக்கோப்பையில் நாம் அபாரமாக விளையாடியும் பைனலில் தோல்வியை சந்தித்தோம். ராகுல் டிராவிட்டுடன் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன்.
ஆனால் கடைசிப் பந்து வீசியதும் அவர் தன்னுடைய உச்சகட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அவரிடம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கோப்பையை கையில் கொடுத்தது நெஞ்சைத் தொட்ட சிறப்பான செயலாக அமைந்தது. அதை அவர் கொண்டாடிய விதம் இந்த வெற்றி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டியது" என்று கூறினார்.