விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெறும் வரை டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் - ஆஷிஸ் நெஹ்ரா
|இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
புதுடெல்லி,
இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடுகிறது.
முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. பணிச்சுமை கருதி அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டாலும் 2007க்குப்பின் டி20 உலகக் கோப்பைகளில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளையும் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டி20 கேரியர் முடிந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் வரை விளையாட வேண்டுமென ஆஷிஸ் நெஹ்ரா கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக 2023 உலகக்கோப்பையில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பார்த்து அந்த 2 வீரர்களையும் எந்த தேர்வுக்குழு தலைவராலும் 2024 டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்ய முடியாமல் இருக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-
"விராட் கோலி ஒரு காலண்டர் வருடத்தில் 800 - 1000 ரன்கள் குவித்து வருகிறார். அதே போல ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் விதத்திற்கு அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழு ஆர்வப்படுவார்கள். ரோகித் மற்றும் விராட் ஆகியோரிடம் தற்போதைக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடாதீர்கள் அல்லது ஓய்வெடுங்கள் என்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் ஓய்வு பெறும் வரை அவர்கள் விளையாட வேண்டும். குறிப்பாக இதே போல ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும்" என்று கூறினார்.