விராட் கோலி விலகல் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விகாஸ் கோலி
|இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகினார்.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த 2 போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடம்பெற்றிருந்தார். இருப்பினும் இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.
இப்படி விராட் கோலி இந்திய அணியில் இருந்து திடீரென விலகியதால் அவரது விலகல் குறித்த பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வந்தன. அந்த வகையில் அவருடைய தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்றும் சில வதந்திகளை சமூக வலைதளத்தின் மூலம் பரப்பி வந்தனர்.
இந்நிலையில் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், 'என்னுடைய தாயின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்தி எதுவுமே உண்மை கிடையாது. எனது தாய் நலமாக உள்ளார். விராட் கோலி தனிப்பட்ட முறையிலேயே அவரது முடிவை எடுத்துள்ளார். மக்கள் மற்றும் ஊடகங்கள் முறையான தகவல்கள் இல்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று பதிவிட்டுள்ளார்.