விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: கேரளா, பெங்கால் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்
|நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் அரியானா-பெங்கால், ராஜஸ்தான்-கேரளா, விதர்பா-கர்நாடகா, தமிழ்நாடு-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராஜ்கோட்,
22-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் மும்பை, விதர்பா, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் கேரள அணி, மராட்டியத்துடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த கேரளா 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 383 ரன்கள் குவித்தது. கிருஷ்ண பிரசாத் 144 ரன்னும், ரோஹன் குன்னும்மால் 120 ரன்னும் சேர்த்தனர். பின்னர் 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மராட்டிய அணி 37.4 ஓவர்களில் 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் கேரள அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது. கேரளா தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 4 விக்கெட்டும், வைசாக் சந்திரன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதேபோல் சவுராஷ்டிராவில் நடந்த மற்றொரு கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பெங்கால் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. இதில் பிரியங் பன்சால் சதத்தின் உதவியுடன் குஜராத் நிர்ணயித்த 284 ரன் இலக்கை பெங்கால் அணி 46 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் சுதிப் குமார் கராமி 117 ரன்னுடனும், அனுஸ்டப் மசூம்தார் 102 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் அரியானா-பெங்கால், ராஜஸ்தான்-கேரளா, விதர்பா-கர்நாடகா, தமிழ்நாடு-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டங்கள் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.