< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி
கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி

தினத்தந்தி
|
26 Nov 2023 2:01 AM IST

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனது தொடக்க ஆட்டத்தில் கோவாவை தோற்கடித்தது. சாய் சுதர்சன் சதம் விளாசினார்.

22-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு, ஜெய்ப்பூர், ஆமதாபாத், சண்டிகார், மும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகளில் இருந்து வெற்றி பெறும் 2 அணிகள் கால்இறுதியை எட்டும்.

மும்பையை அடுத்த தானேவில் நேற்று நடந்த 'இ' பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-கோவா அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த கோவா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 125 ரன்னும் (144 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழக்காமல் 47 ரன்னும், பாபா அபராஜித் 40 ரன்னும் சேர்த்தனர். கோவா அணி தரப்பில் அர்ஜூன் தெண்டுல்கர், தர்ஷம் மிசால் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கோவா அணி 50 ஓவர் முடிவில் 263 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. இதனால் தமிழக அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட்டும், சாய் கிஷோர், பாபா அபராஜித் தலா 2 விக்கெட்டும், டி.நடராஜன், சாய் சுதர்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மேலும் செய்திகள்