பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பாராட்டுக்குரியவர்கள் - ஷாண்டோ
|பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராவல்பிண்டி,
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட வங்காளதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அளித்த பேட்டியில் கூறியதாவது, மிகப்பெரிய இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் சிறப்பானதாகும். இதற்கு முன்பு நாங்கள் இங்கு வெற்றி கண்டதில்லை. இது ஒரு அருமையான உணர்வு. இது உண்மையிலேயே எங்களுக்கு சிறப்பான தருணமாகும்.
கடந்த ஒரு மாதமாக நாங்கள் கடினமான சூழ்நிலையில் இருந்தோம். ஆனால் இந்த வெற்றி மக்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை அளிக்கும். கடினமான சூழ்நிலையிலும் ஒவ்வொரு வீரர்களும் செயல்பட்ட விதம் அருமையாக இருந்தது. முதல் இன்னிங்சில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு பெரிய ஸ்கோரை எடுத்தனர்.
சிறப்பாக பந்து வீசினால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். ஷகிப், மிராஸ் ஆடுகளத்தின் தன்மையை சிறப்பாக பயன்படுத்தி பந்து வீசினர். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.