இந்திய அணியில் அவர்களின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் - விக்ரம் ரத்தோர்
|கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் வருங்கால பேட்டிங் துறையின் முதுகெலும்பாக இருப்பார்கள் என்று விக்ரம் ரத்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் அவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் விராட் கோலி ரோகித் சர்மா போன்ற மகத்தான வீரர்களின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்திய அணியில் ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் வருங்கால பேட்டிங் துறையின் முதுகெலும்பாக இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் மற்றும் ரோகித் ஆகியோரின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. இருப்பினும் நிறைவு பெற்ற ஜிம்பாப்வே தொடர் நம்முடைய வருங்கால டி20 அணி எப்படி இருக்கும் என்பதை காட்டியது. எனவே அதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட மாட்டேன். ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் நிறைய ஆழம் இருக்கிறது. நம்மிடம் திறமையான நுணுக்கங்கள் நிறைந்த வீரர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். எனவே அவர்களை கட்டுப்பாட்டுடன் மாற்ற வேண்டும்.
குறிப்பாக ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல் போன்ற இன்னும் சில வீரர்கள் இப்போதே அடுத்த தலைமுறையில் அசத்தக் கூடியவர்களாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் கே.எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல தயாராக உள்ளனர். அது போல இன்னும் நிறைய வீரர்கள் வருகின்றனர். ஆனால் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் நீண்ட காலமாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடியவர்களாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். அவர்கள் வரும் காலங்களில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக இருப்பார்கள்" என்று கூறினார்.