அந்த இந்திய வீரருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம் - ரஷித் கான்
|இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.
பார்படாஸ்,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, பலம் வாய்ந்த இந்தியாவை எதிர் கொள்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பேசியுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவது கடினமானது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவர் எப்போதும் ரன்களை குவிப்பதற்கும் உங்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் யோசித்து மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுவார். அதேபோன்று உலகத்தரம் வாய்ந்த அவர் எந்த பந்துவீச்சாளர் பந்து வீசினாலும் இடைவெளிகளை கண்டுபிடித்து அடிப்பதில் கைதேர்ந்தவர். அவருக்கு எதிராக பந்து வீசுவது நிச்சயம் எனக்கும் சவாலான ஒன்றுதான்" என்று கூறினார்.