இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் வெங்கடேஷ் ஐயர்
|வெங்கடேஷ் ஐயர், இங்கிலாந்து கவுண்டி அணியான லங்காஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அறிமுகமான வெங்கடேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணிக்காக 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த இவர் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து சரியாக விளையாடாத காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர், இங்கிலாந்து கவுண்டி அணியான லங்காஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் கோப்பை மற்றும் கவுண்டி சாம்பியன்ஷிப்பின் இரண்டு சுற்றுகளில் விளையாட உள்ளார் வெங்கடேஷ் ஐயர். இதன் மூலம் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் வெங்கடேஷ் ஐயர் தடம்பதிக்க உள்ளார்.