வருண் சக்ரவர்த்தி அபார பந்துவீச்சு...கொல்கத்தா அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி
|கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் கொல்கத்தா - டெல்லி அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா - ஜேக் பிரேசர் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 13 ரன்களில் வைபவ் ஆரோரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான மெக்கர்க் இந்த முறை ஏமாற்றம் அளித்தார். அவர் 12 ரன்களில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடக்கம் முதலே கொல்கத்தா பந்து வீச்சில் தடுமாறிய டெல்லி பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். டெல்லி அணியில் பின்னர் களமிறங்கிய வீரர்களில் அபிஷேக் போரல் 18 ரன்களிலும், ஷாய் ஹோப் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய பண்ட் 27 ரன்களிலும், அக்சர் படேல் 15 ரன்களிலும், ஸ்டப்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் குல்தீப் யாதவ் ஒரளவு சமாளித்து அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். அவர் 26 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். டெல்லி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக விக்கெட்டுகள் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்க உள்ளது.