< Back
கிரிக்கெட்
உஸ்மான் கவாஜா சதம்: ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 311 ரன்கள் சேர்ப்பு
கிரிக்கெட்

உஸ்மான் கவாஜா சதம்: ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 311 ரன்கள் சேர்ப்பு

தினத்தந்தி
|
18 Jun 2023 4:04 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

பர்மிங்காம்,

ஆஷஸ் டெஸ்ட்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 78 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 118 ரன்னுடனும், ஆலி ராபின்சன் 17 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 8 ரன்னுடனும், உஸ்மான் கவாஜா 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து நிதானமாக ஆடிய டேவிட் வார்னர் 9 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்சேன் (0) முதல் பந்திலேயே ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கினார்.

டிராவிஸ் ஹெட் அரைசதம்

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டீவன் சுமித் (16 ரன்கள், 59 பந்து) சோபிக்கவில்லை. அவர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். நடுவரின் இந்த முடிவை எதிர்த்து ஸ்டீவன் சுமித் செய்த அப்பீலுக்கு பலன் கிட்டவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 67 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜாவுடன் இணைந்தார். உஸ்மான் கவாஜா நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடினார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் வேகமாக மட்டையை சுழற்றினார். உஸ்மான் கவாஜா 106 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். டிராவிஸ் ஹெட் 60 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவர் அடித்த 14-வது அரைசதம் இதுவாகும். அடுத்த ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் (50 ரன்கள், 63 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) மொயீன் அலி பந்து வீச்சில் மிட் விக்கெட் திசையில் நின்ற ஜாக் கிராவ்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 148 ரன்னாக இருந்தது.

கவாஜா சதம்

இதனையடுத்து கேமரூன் கிரீன் களம் இறங்கினார். தேனீர் இடைவேளையின் போது அந்த அணி 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய கேமரூன் கிரீன் 38 ரன்னில் (68 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) மொயீன் அலி சுழலில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, கவாஜாவுடன் கைகோர்த்தார்.

நிலைத்து நின்று அபாரமாக ஆடிய உஸ்மான் கவாஜா 199 பந்துகளில் சதம் அடித்ததுடன் அணியை சரிவில் இருந்தும் மீட்டார். அவர் அடித்த 15-வது சதம் இதுவாகும். இங்கிலாந்து மண்ணில் அவர் பதிவு செய்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடித்து ஆடிய அலெக்ஸ் கேரி 69 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவர் அடித்த 5-வது அரைசதம் இதுவாகும்.

ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 311 ரன்கள்

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 94 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து 82 ரன்கள் பின்தங்கி உள்ளது. உஸ்மான் கவாஜா 126 ரன்னுடனும் (279 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்), அலெக்ஸ் கேரி 52 ரன்னுடனும் (80 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருக்கின்றனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

மேலும் செய்திகள்