மோசமான ஷாட் தேர்வே விக்கெட் வீழ்ச்சிக்கு காரணம் - டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து
|நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத்தை 89 ரன்னில் சுருட்டி டெல்லி எளிதில் வெற்றி பெற்றது.
ஆமதாபாத்,
10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மல்லுக்கட்டியது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணியில் டேவிட் வார்னர் ஆடவில்லை. 'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் குஜராத்தை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் பேட்ஸ்மேன்கள் மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் தகிடுதத்தம் போட்டனர். விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (2 ரன்), கேப்டன் சுப்மன் கில் (8 ரன்) டெல்லியின் வேகத்தில் அடங்கினர். இந்த வீழ்ச்சியில் இருந்து குஜராத்தால் மீள முடியவில்லை. சாய் சுதர்சன் (12 ரன்), டேவிட் மில்லர் (2 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை. மிடில் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் கைவரிசை காட்டி மேலும் சிதைத்தனர்.
இந்த ஆட்டத்திற்குரிய ஆடுகளம் (பிட்ச்) இந்த சீசனில் இதற்கு முன்பு பயன்படுத்தப்படவில்லை. இதனால் அதை துல்லியமாக கணிக்க முடியாமல் குஜராத் பேட்டர்கள் திகைத்து போனார்கள். விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தன.
பின்வரிசையில் ராகுல் திவேதியா (10 ரன்), ரஷித்கான் (31 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) இரட்டை இலக்கம் பங்களிப்பு அளித்தும் அவர்களால் 100 ரன்களை கூட தொட முடியவில்லை. 17.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த குஜராத் 89 ரன்னில் சுருண்டது. நடப்பு தொடரில் ஒரு அணி 100 ரன்னுக்குள் முடங்கியது இதுவே முதல்முறையாகும். டெல்லி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ்குமார் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாக் பிரேசர் மெக்குர்க் 20 ரன்னும், ஷாய் ஹோப் 19 ரன்னும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 16 ரன்னும் எடுத்தனர். விக்கெட் கீப்பிங்கில் அசத்திய ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 3-வது வெற்றியை ருசித்த டெல்லி அணி புள்ளிபட்டியலில் 9-ல் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியது. குஜராத்துக்கு 4-வது தோல்வியாகும்.
தோல்விக்கு பிறகு குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. ஆடுகளம் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. எங்களது சில விக்கெட்டுகளை பார்த்தால், ஆடுகளத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது தெரியும். மோசமான ஷாட் தேர்வே விக்கெட் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்வேன். இது போன்று 89 ரன் மட்டுமே எடுக்கும்போது, இரட்டை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம். இந்த தோல்வியை மறந்து வலுவாக மீண்டு வருவது அவசியம். இந்த சீசனில் முதல் பாதி முடிந்துள்ளது. நாங்கள் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். முந்தைய ஆண்டுகளை போன்று பிற்பாதியில் மேலும் 5-6 ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்' என்றார்.
டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், 'நிறைய விஷயங்கள் எனக்கு திருப்தி அளிக்கிறது. எங்களது சிறந்த பந்து வீச்சில் இதுவும் ஒன்று. ஆனாலும் இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது' என்றார்.
இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெறும் 89 ரன்னில் அடங்கியது. ஐ.பி.எல். வரலாற்றில் குஜராத்தின் மோசமான ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு இதே மைதானத்தில் இதே டெல்லிக்கு எதிராக 125 ரன் எடுத்ததே குஜராத்தின் குறைந்த ஸ்கோராக இருந்தது. அத்துடன் ஆமதாபாத் மைதானத்தில் ஒரு அணியின் குறைந்த ஸ்கோராகவும் இது பதிவானது.