< Back
கிரிக்கெட்
மகளுக்கு தவறான பாதையை காட்டியதாக தாயை கேலி செய்த ஊர் மக்கள் - சோகத்தை கடந்து சாதித்த அர்ச்சனாதேவி

image courtesy: BCCI Women twitter

கிரிக்கெட்

மகளுக்கு தவறான பாதையை காட்டியதாக தாயை கேலி செய்த ஊர் மக்கள் - சோகத்தை கடந்து சாதித்த அர்ச்சனாதேவி

தினத்தந்தி
|
30 Jan 2023 9:58 PM GMT

அர்ச்சனா கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்த போது அவரை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாக அவரது தாயாரை பலரும் திட்டியிருக்கிறார்கள்.

புதுடெல்லி,

ஜூனியர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் 18 வயதான அர்ச்சனா தேவி, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ரதாய் புர்வா என்ற கிராமத்தை சேர்ந்தவர். தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே புற்றுநோய்க்கு தந்தையை பறிகொடுத்தவர். ஒரு நாள், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் அடித்த பந்தை எடுக்க சென்ற போது பாம்பு கடித்து அவரது சகோதரர் புத்திர்ராம் மரணம் அடைந்தார்.

இத்தகைய மீளா சோகம், ஏழ்மையான குடும்பம் இவற்றை எல்லாம் கடந்து இன்று உலக கிரிக்கெட் அரங்கில் முத்திரை பதித்துள்ளார். அவரது வளர்ச்சிக்கு தாயார் சாவித்திரி தேவி, அண்ணன் ரோகித் அளித்த ஊக்கமும், பயிற்சியாளர் கபில் பாண்டேவின் வழிகாட்டுதலும் முக்கிய காரணமாகும். கபில் பாண்டேவின் கிரிக்கெட் அகாடமி கான்பூரில் உள்ளது. தங்கள் ஊரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அந்த அகாடமிக்கு தினமும் சென்று வருவதற்கு அர்ச்சனாவிடம் வசதி வாய்ப்பு இல்லை. இதையடுத்து அவர் கான்பூரில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி தினமும் பயிற்சி பெறுவதற்கு பள்ளி ஆசிரியர் பூனம் குப்தா உதவினார்.

ஒரு சமயத்தில் தந்தை சாவு, மகன் மரணம் இந்த சம்பவத்துக்கு பிறகு அர்ச்சனாவின் தாயார் சாவித்திரி தேவி ஊராரின் கேலி பேச்சுக்கு ஆளானார். அவரை சூனியக்காரி என்று வசைபாடியதோடு அவர் ரோட்டில் நடந்து சென்றாலே, அவருக்கு எதிரே வருபவர்கள் வேறு பக்கமாக திரும்பி விடுவார்களாம். அர்ச்சனா கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்த போது அவரை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாக பலரும் திட்டியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அர்ச்சனா கிரிக்கெட்டில் உயர்ந்த நிலையை எட்டியதும், அவரது வீட்டிற்கு அந்த பகுதியினர் படையெடுத்து வண்ணம் உள்ளனர்.

அர்ச்சனாவின் ஊரில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வாடிக்கையாகும். இதனால் ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை டி.வி.யில் முழுமையாக பார்க்க முடியுமா? என்று குடும்பத்தினர் தவித்தனர் . இதை அறிந்த உள்ளூர் போலீஸ்காரர் ஒருவர் அவரது வீட்டுக்கு இன்வெட்டர் பேட்டரி ஏற்பாடு செய்து கொடுத்தார். இதன் மூலம் அவர்கள் இறுதி ஆட்டத்தை மின்தடையில்லாமல் பார்த்து ரசித்தனர். குடும்பத்தினர் மட்டுமல்ல, அந்த ஊரே அங்கு கூடியிருந்து போட்டியை பார்த்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அர்ச்சனாவின் சகோதரர் ரோகித் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்