அவருடைய இடத்தை நிரப்ப முயற்சிப்பது மிகவும் கடினம் - ருதுராஜ் கெய்க்வாட்
|டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை நிரப்புவதை பற்றி தாம் சிந்திக்கவில்லை என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பையை வென்ற பின் ரோகித், விராட், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இதையடுத்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் ரோகித் இடத்தில் அபிஷேக் சர்மாவும், விராட் கோலி இறங்கும் 3ம் வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய டி20 அணியில் விராட் கோலியின் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது, உண்மையில் அது மிகப்பெரிய தலைப்பு. இந்தத் தருணத்தில் விராட் கோலியுடன் ஒப்பிடுவது அல்லது அவருடைய இடத்தை நிரப்ப முயற்சிப்பது பற்றி சிந்திப்பது சரியானதல்ல. ஏனெனில் அது மிகவும் கடினம். குறிப்பாக ஐ.பி.எல். தொடரில் நான் ஏற்கனவே சொன்னது போல அது கிட்டத்தட்ட மஹி (தோனி) பாய் இடத்தை நிரப்புவது போன்றதாகும்.
பொதுவாக நீங்கள் உங்களுடைய சொந்த கேரியரை துவக்க வேண்டும். உங்களின் சொந்த விளையாட்டை விளையாட வேண்டும். அதற்குத்தான் தற்போது நான் முன்னுரிமை கொடுக்கிறேன். அணி எங்கு விரும்புகிறதோ அங்கே நான் பேட்டிங் செய்வேன். அதே சமயம் துவக்க வீரராக விளையாடுவதற்கும் மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஏனெனில் நீங்கள் புதிய பந்தை எதிர்கொள்வீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.