< Back
கிரிக்கெட்
வில்லியம்சனின் இடத்தை நிரப்புவதற்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன் - குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன்

Image Courtesy : @gujarat_titans twitter

கிரிக்கெட்

'வில்லியம்சனின் இடத்தை நிரப்புவதற்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன்' - குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன்

தினத்தந்தி
|
1 Jun 2023 6:01 AM IST

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் இப்படியொரு அதிரடியை எதிர்பார்க்கவில்லை என குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத் டைட்டன்சை தோற்கடித்து 5-வது முறையாக மகுடம் சூடி சாதனை படைத்தது. குஜராத் அணியில் சாய் சுதர்சன் 96 ரன்கள் (47 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி மிரள வைத்தார். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஒரு வீரரின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த அணி தோல்வி அடைந்தாலும் அவரது பேட்டிங்கை சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்து தள்ளினர். இந்த சீசனில் 8 ஆட்டத்தில் விளையாடி 3 அரைசதம் உள்பட 362 ரன்கள் சேர்த்தார்.

21 வயதான சாய் சுதர்சன் ஐ.பி.எல்.-ல் ரூ.20 லட்சத்திற்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த அவரது குடும்பம் விளையாட்டு பாரம்பரிய பின்னணியை கொண்டது. அவரது தந்தை பரத்வாஜ் முன்னாள் தடகள வீரர் ஆவார். தாயார் உஷா, தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். சாய் சுதர்சனின் அண்ணன் சாய்ராம் ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கிறார்.

இறுதிப்போட்டியில் சென்னை பவுலர்களை திணறடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த சாய்சுதர்சன் அளித்த பேட்டி வருமாறு:-

"போட்டி முடிந்து அதிகாலை ஓட்டலுக்கு திரும்பியதும் எனது பேட்டிங்கின் ஹைலெட்சை பலமுறை பார்த்தேன். பதிரானாவின் கடைசி ஓவரில் எக்ஸ்டிரா கவர் திசையில் அடித்த சிக்சர் ஷாட், எனக்கு மிகவும் பிடித்தமான ஷாட். மிகப்பெரிய போட்டி களத்தில் இது போன்று விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இடையில் சில ஆட்டங்களில் களம் காண வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் அணி நிர்வாகம் எப்போதும் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தது. நானும் எந்த ஆட்டத்தில் ஆடுவதற்கும் தயாராக இருந்தேன்.

சதம் அடிக்காவிட்டாலும் இறுதிப்போட்டியில் கணிசமான பங்களிப்பை அளித்து அணியை நல்ல நிலைக்கு உயர்த்தியது மனநிறைவை தந்தது. ஆட்டமிழந்து வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்கி சென்ற போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் உடல்சிலிர்க்கிறது. சக வீரர்கள், பயிற்சியாளர்களிடம் இருந்து எனக்கு அதிக நம்பிக்கையும், ஆதரவும் கிடைத்தது. குறிப்பாக விஜய் சங்கர், சாய் கிஷோர் (இருவரும் குஜராத் அணியில் உள்ள தமிழக வீரர்கள்) எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர். அவர்களுடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டேன். தமிழக அணியில் அறிமுகம் ஆன போது அதற்குரிய தொப்பியை எனக்கு வழங்கியவர் விஜய் சங்கர் தான். அவருடன் கிரிக்கெட் குறித்து நிறைய பேசுவோம். விவாதிப்போம்.

எங்கள் அணியில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே விலகி தாயகம் திரும்பினார். கிட்டத்தட்ட அணியில் வில்லியம்சனின் பங்களிப்பு என்னவோ அது தான் நானும் செய்ய வேண்டி இருந்தது. அவர் சொந்த நாடு சென்றதும் போனில் மெசேஜ் மூலம் அவருடன் தகவல் பரிமாறினேன். முந்தைய நாள் இரவு கூட எனக்கு அவர், 'மிகவும் சந்தோஷம். பணியை மிகச்சிறப்பாக செய்தீர்கள்' என்று பாராட்டி மெசேஜ் அனுப்பி இருந்தார். வில்லியம்சனின் இடத்தை நிரப்புவதற்கு முடிந்த அளவுக்கு எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன்.

மாற்றுஆட்டக்காரர் விதிப்படி 2-வது இன்னிங்சில் நான் களம்இறங்கவில்லை. இதனால் வீரர்களின் அறைக்கு திரும்பினேன். ஆட்டம் முழுவதையும் டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்தேன். சாப்பிட கூட நேரமில்லை. மொத்தத்தில் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் மகிழ்ச்சி. ஆட்டத்தின் இறுதியில் கொஞ்சம் ஏமாற்றம். ஆனால் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்" என்று சாய் சுதர்சன் கூறினார்.

சாய் சுதர்சன் அடுத்து வருகிற 12-ந்தேதி தொடங்கும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அந்த அணி அவரை ரூ.21.6 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்