< Back
கிரிக்கெட்
ஒன்றாக சேர்ந்து நாட்டை பெருமைப்பட வைப்பதே எங்களுடைய வேலை - விராட் கோலி குறித்து கம்பீர்
கிரிக்கெட்

ஒன்றாக சேர்ந்து நாட்டை பெருமைப்பட வைப்பதே எங்களுடைய வேலை - விராட் கோலி குறித்து கம்பீர்

தினத்தந்தி
|
22 July 2024 9:09 AM GMT

ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு தாமும் விராட் கோலியும் எதிரிகள் அல்ல என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கம்பீரின் பதவிக்காலம் இந்த தொடருடன்தான் தொடங்க உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் பலமுறை ஐபிஎல் போட்டிகளின் போது கம்பீரும், விராட் கோலியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவங்களும், காரசாரமான வார்த்தைகளை பரிமாறிக் கொண்ட சம்பவமும் நடைபெற்றதால் இருவரும் ஒன்றாக இணைந்து எப்படி பணியாற்ற போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு தாமும் விராட் கோலியும் எதிரிகள் அல்ல என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். எனவே இருவரும் ஒன்றாக சேர்ந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க பாடுபட உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"எங்களைப் பற்றிய செய்திகள் டிஆர்பி-க்கு நன்றாக இருக்கும். அவருடன் என்னுடைய உறவு பொதுவெளியில் இருக்காது. எங்கள் உறவு முதிர்ச்சியான 2 தனி நபர்களுக்கு இடையேயானது. களத்தில் நாங்கள் ஒரே பகுதியில் இருக்க வேண்டும். விராட் கோலியுடன் நான் நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறேன். பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலியுடன் சில மெசேஜ்களை பகிர்ந்து கொண்டேன்.

ஆனால் பயிற்சியாளராக வருவதற்கு முன்பாக அல்லது பின்பாக நாங்கள் என்ன விவாதித்தோம் என்பது முக்கியமல்ல. அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். நாங்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம் என்று நம்புகிறேன். ஒன்றாக சேர்ந்து நன்றாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்து நாட்டை பெருமைப்பட வைப்பதே எங்களுடைய வேலை. நாங்கள் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். எனவே நாங்கள் ஒன்றாக ஒரே பக்கத்தில் நின்று செயல்படுவது அவசியம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்