டிஎன்பிஎல்: 18 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேலம் அணி வெற்றி..!
|20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. சேலம் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோபிநாத் 9 ரன்கள், கவின் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த டெர்லி பெராரியோ சிறப்பாக விளையாடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் ரன்கள் குவிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் சேலம் அணி எடுத்தது. தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் பேட்டிங் செய்தது.
திண்டுக்கல் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஹரி நிஷாந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானர். மற்றொரு தொடக்க வீரர் விமல் குமார் சிறப்பாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் குறைந்த ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து சேலம் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.